தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
பீஜிங்: மேற்காசியாவில் நிலவும் போர் பதற்றத்திற்கு மத்தியில் சீனா சென்றுள்ள அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப், அந்நாட்டு அதிபர் ஷீ ஜின்பிங்குடன் முக்கிய பேச்சு நடத்த உள்ளார்.
மூன்று நாள் அரசு முறைப் பயணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், நம் அண்டை நாடான சீனாவுக்கு சென்றுள்ளார். தொடர்ந்து நீடிக்கும் ஈரான் போர், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம், எரிசக்தி தட்டுப்பாடு போன்ற பல பிரச்னைகளுக்கு இடையே அவர் சீனா சென்றுள்ளார்.
கடந்த, 2017ம் ஆண்டில் டிரம்ப் சீனாவுக்கு சென்றார். அதற்குப் பின், அமெரிக்க அதிபர் ஒருவர் சீனாவுக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இது என்பதாலும் உலக நாடுகளின் கவனம் பெற்றுள்ளது.
அவர் சீனா வந்தடைந்த நிலையில், சீன அதிபர் ஷீ ஜின்பிங்குடன் முக்கிய பேச்சு நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் வர்த்தகப் போர், வரி விதிப்பு தொடர்பான மோதல்கள் குறித்து விவாதிக்கப்பட உள்ளன.
அத்துடன் ஈரானுடனான பதற்றத்தை தணிக்கவும், துாதரக ரீதியிலான உடன்பாடு ஏற்படுத்தவும் சீனா தன் செல்வாக்கை பயன்படுத்த வேண்டும் என டிரம்ப் வலியுறுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நீண்டகாலமாக நீடிக்கும், தைவானுக்கு சீனா உரிமை கோரும் விவகாரம் மற்றும் சீனாவின் கனிம ஏற்றுமதி கட்டுப்பாடுகள் குறித்து பேச்சு நடக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
அதிபர் டிரம்புடன் அமெரிக்காவின் முன்னணி தொழில் அதிபர்களும் சீனா சென்றுள்ளனர். குறிப்பாக, டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க், ஆப்பிள் நிறுவன தலைமை செயல் அதிகாரி டிம் குக் போன்றவர்கள் இந்த பயணத்தில் இடம்பெற்றுள்ளனர். இது சீனாவுடனான பொருளாதார உறவில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் என்றும் பல வர்த்தக ஒப்பந்தங்கள் எட்டப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்தச் சந்திப்பு உலகப் பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
Source: Dinamalar