NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

வரிசையில் நிற்காமல் வாக்களித்த நடிகர்கள்… ‛‛பந்தா” காட்டி பகட்டாக போட்டோவுக்கு மட்டும் ‛‛போஸ்”

சென்னை : திரைப்பிரபலங்கள் ஓட்டுச்சாவடிக்கு செல்லும் போது வரிசையில் நிற்கும் மக்களை பார்த்து கை காட்டியும், பந்தா காட்டியபடி வரிசையில் நிற்காமல் நேராக உள்ளே சென்று ஓட்டளித்தனர்.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு இன்று(ஏப்., 23) விறுவிறுப்பாக நடந்து வருகிறது. கோடை வெயில் சுட்டெரித்து வருவதால் காலை முதலே பலரும் ஓட்டளிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர். வயதானவர்கள் கூட வரிசையில் நின்று ஓட்டளித்து தங்களது ஜனநாயக கடமையை செய்து வருகின்றனர். ஆனால் திரைப்பிரபலங்களோ வரிசையில் நிற்காமல் பலர் ஓட்டளித்துள்ளனர்.

நடிகர் அஜித் முதல் ஆளாய் காலை 7 மணிக்கே ஓட்டளித்தார். பெரும்பாலும் இவர் வரிசையில் நின்று தான் ஓட்டளிப்பார். இந்தமுறை அவர் வரிசையில் நிற்கவில்லை. நேரடியாக சென்று ஓட்டளித்தார். இவரைப்போலவே நடிகரும், தவெக., தலைவருமான விஜயும் வரிசையில் நிற்காமல் ஓட்டளித்தார். மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், ஸ்ருதிஹாசன், தனுஷ், சிவகார்த்திகேயன், விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ரஜினி, திரிஷா, இளையராஜா, விக்ரம், துருவ் விக்ரம், ஷங்கர், அதிதி உள்ளிட்ட பல திரையுலகினரும் இதேப்போன்று ஓட்டளித்துள்ளனர்.

நாட்டின் முக்கிய ஜனநாயக கடமை ஓட்டளிப்பது. இதற்காக காலை முதலே கால்கடுக்க, வெயிலையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் பலரும் மணிக்கணக்கில் வரிசையில் நின்று ஓட்டளிக்கின்றனர். வயதானவர்கள் கூட வரிசையில் பொறுமையாக நின்று ஜனநாயக கடமையை நிறைவேற்றுகின்றனர். ஆனால் திரைப்பிரபலங்களுக்கு இதெல்லாம் பொருந்தாது போலிருக்கிறது. அவர்கள் எப்பவும் கூடுதல் சலுகையை அவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். அவர்கள் வந்தால் மட்டும் வரிசையில் நிற்க தேவையில்லை. நேரடியாக சென்று ஓட்டளிக்கலாம். அப்படி ஓட்டளித்து விட்டு பந்தாவாக போட்டோவிற்கு மட்டும் போஸ் கொடுத்துவிட்டு செல்கின்றனர். இதை காவல் துறையினரும் கண்டு கொள்வதில்லை. போலீஸிடம் கேட்டால் பிரபலங்கள் வரிசையில் நின்று ஓட்டளிக்கும்போது தேவையில்லாமல் ஒரு கூட்டம் கூடுகிறது, எங்களுக்கு இதனால் பிரச்னை ஏற்படுகிறது. அதனாலேயே அவர்களை நேரடியாக ஓட்டளிக்க அனுமதிக்கின்றோம் என்கிறார்கள்.

விதி என்றால் எல்லோருக்கும் பொதுவானது தான். பிரபலங்களுக்கு மட்டும் என்ன ஸ்பெஷல், அவர்களையும் விட முதியவர்கள் கால்கடுக்க காத்திருந்து ஓட்டளிக்கின்றனர். அவை எல்லாம் பிரபலங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா என மக்கள் தங்களது வேதனையை தெரிவிக்கின்றனர்.

வரிசையில் நின்று ஓட்டளித்த திரைப்பிரபலங்கள்

எல்லா திரைப்பிரபலங்களும் விதியை மீறி ஓட்டு போட்டார்கள் என சொல்ல முடியாது. சிலர் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று ஓட்டளித்தனர். குறிப்பாக நடிகர் ஜீவா இரண்டு மணிநேரம் காத்திருந்து ஓட்டளித்தார். பிரபு, விக்ரம் பிரபு, சூர்யா, ஜோதிகா, கார்த்தி, குஷ்பு, சுந்தர் சி, டி ராஜேந்தர், மன்சூர் அலிகான், ஆர்ஜே பாலாஜி, ஹரிஷ் கல்யாண், ஜெய், பிரதீப் ரங்கநாதன், வரலட்சுமி, பாக்யராஜ், சாந்தனு உள்ளிட்டோர் வரிசையில் நின்று ஓட்டளித்தனர்.

நடிகர்கள் வரிசையில் நின்றால் கூட்டம் கூடும் என்று ஒரு சப்பையான காரணத்தை சொல்லும் போலீஸ், பல நடிகர்கள் வரிசையில் நின்று வாக்களித்துள்ளனரே, அதற்கு என்ன சொல்லப் போகிறது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP