வங்கதேச ஊடுருவல்காரர்கள் இனி நாடு கடத்தப்படுவது உறுதி; மே.வங்கத்தில் புதிய விதியை அமல்படுத்தியது பா.ஜ., அரசு
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
கொல்கட்டா: ”மேற்கு வங்கத்தில் பிடிபடும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் இனி, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படாமல் நேரடியாக பி.எஸ்.எப்., எனப்படும் எல்லை பாதுகாப்பு படையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடனடியாக நாடு கடத்தப்படுவர். இதற்கான புதிய விதி அமலுக்கு வந்துவிட்டது,” என, அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் முதல்வர் சுவேந்து அதிகாரி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. திரிணமுல் காங்., தலைவர் மம்தா பானர்ஜி மாநில முதல்வராக இருந்தபோது, வங்கதேசத்தில் இருந்து ஊடுருவி வந்தவர்களுக்கு புகலிடம் வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது மாநிலத்தில் ஆட்சி மாறிய நிலையில், வங்கதேச ஊடுருவல்காரர்களை நாடு கடத்துவதற்கான நடவடிக்கையை அம்மாநில முதல்வர் சுவேந்து அதிகாரி முழுவீச்சில் முடுக்கி விட்டுள்ளார்.
அதன் ஒரு கட்டமாக, இனி மேற்கு வங்கத்தில் கைதாகும் வங்கதேச ஊடுருவல்காரர்கள் நேரடியாக பி.எஸ்.எப்., வீரர்கள் வசம் ஒப்படைக்கப்படுவர் என அவர் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: வங்கதேச ஊடுருவல்காரர்கள் பிடிபட்டால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவது தான் இதுவரை வழக்கமாக இருந்து வந்தது. இனி, அப்படி நடக்காது. பிடிபடும் ஊடுருவல்காரர்கள் நேரடியாக பி.எஸ்.எப்., வசம் ஒப்படைக்கப்பட்டு, அவர்களது நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
அதற்கான விதி ஏற்கனவே மேற்கு வங்கத்தில் அமலுக்கு வந்துவிட்டது. ‘கண்டறி, நீக்கு, வெளியேற்று’ என்ற விரிவான திட்டத்தின் கீழ் இந்த நேரடி நாடு கடத்தல் முறை நடைமுறைக்கு வந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
ஊடுருவல்காரர்களை அவர்களது தாய்நாட்டிற்கே அனுப்பி வைப்பது தொடர்பான சட்டத்தின் பெயரை மேற்கு வங்க முதல்வர் சுவேந்து அதிகாரி நேரடியாக குறிப்பிடவில்லை. எனினும் கடந்த ஆண்டு ஏப்ரலில், பார்லி.,யில் நிறைவேற்றப்பட்ட குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் சட்டம், 2025ன் கீழ் இதனை அவர் குறிப்பிட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.இந்த சட்டம் நவீன தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு மற்றும் நாடு கடத்தல் நடைமுறைகளை அடிப்படையாக கொண்டது.
மேற்கு வங்கத்தில், முஸ்லிம் மதக்கல்வியை போதிக்கும் அனைத்து மதரஸா பள்ளிகளிலும் இனி காலை வழிபாட்டின்போது வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான உத்தரவை மாநில அரசு பிறப்பித்தது.
இது உடனடியாக அமலுக்கு வந்தது. ‘அரசின் மாதிரி மதரஸாக்கள், அரசு நிதி உதவியுடன் இயங்கும் மதரஸாக்கள், அங்கீகரிக்கப்பட்ட சிசு சிக்ஷா கேந்திர மையம் மற்றும் மத்யமிக் சிக்ஷா கேந்திர மையம் ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு பொருந்தும்’ என, மதரஸா கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து மதரஸா கல்வி இயக்ககத்தின் உயரதிகாரி ஒருவர் கூறுகையில், ‘காலை வழிபாட்டின்போது ஒரே மாதிரியான தன்மையை பழக்கப்படுத்த வேண்டும் என்பதற்காகவே மாநில அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது,’ என கூறினார்.
இந்த உத்தரவை தீவிரமாக நடைமுறைபடுத்த கோரி, அனைத்து மாவட்ட கலெக்டர்கள், பள்ளி மாவட்ட ஆய்வாளர்கள் மற்றும் மேற்கு வங்க மதரஸா கல்வி வாரியத்திற்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. கடந்த 13ம் தேதி அனைத்து மாநில அரசு பள்ளிகளிலும் காலை வழிபாட்டின்போது வந்தே மாதரம் பாடல் பாடுவது கட்டாயமாக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, மதரஸா பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Source: Dinamalar