தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
சென்னை: ”கிட்னி திருட்டு வழக்கில் தவறு செய்தவர்கள், முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் அருண்ராஜ் தெரிவித்தார்.
அவர் அளித்த பேட்டி: தனியார் மருத்துவமனைகளுக்கான உரிமம் கோரி, 8,000 விண்ணப்பங்கள் நிலுவையில் உள்ளன. இந்த நடைமுறையை எளிதாக்க, ‘ஆன்லைன்’ வாயிலாக விண்ணப்பித்த உடனேயே, தற்காலிக உரிமம் வழங்கும் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.
விண்ணப்பதாரர்கள் தங்களின் மருத்துவ வசதிகள் குறித்த சுய அறிவிப்புடன், உள்கட்டமைப்பு வசதிகளை வீடியோவாக எடுத்து, பதிவேற்றம் செய்ய வேண்டும். அவற்றின் அடிப்படையில், ஓராண்டு காலத்துக்குச் செல்லத்தக்க தற்காலிக உரிமம் உடனடியாக வழங்கப்படும்.
அரசு மருத்துவமனைகளின் துாய்மை மற்றும் செயல்பாடுகளை ஊக்குவிக்கும், ‘காயகல்பம்’ திட்டத்தின் கீழ், இதுவரை ஆண்டுக்கு ஒருமுறை மட்டுமே தரவரிசை வழங்கப்பட்டு வந்தது. இனி, மருத்துவமனைகளை தொடர்ந்து உத்வேகத்துடன் செயல்பட வைக்க, ஆண்டுக்கு நான்கு முறை தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.
கடந்த ஆட்சி காலத்தில் நடந்த சிறுநீரக திருட்டு தொடர்பான விசாரணை, தேர்தல் காரணமாக சற்று தொய்வடைந்தது. தற்போது, விசாரணை மீண்டும் முழு வீச்சில் தொடங்கப்பட்டு உள்ளது. இதில், எவ்வித அரசியல் தலையீடும் இன்றி, முழு வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடக்கும். தவறு செய்தவர்கள் முன்னாள் அமைச்சர்களாக இருந்தாலும் சரி, சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது. பாதிக்கப்பட்டவர்களுக்கு நிச்சயம் நீதி கிடைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar