‘மம்தா கட்சியின் 50 எம்.எல்.ஏ.,க்கள் பா.ஜ.,வில் இணைய தயார்’ :பா.ஜ., – எம்.பி., சவுமித்ரா ‘குண்டு’
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
கொல்கட்டா: மேற்கு வங்கத்தில், சட்டசபை தேர்தல் தோல்வியால் முன்னாள் முதல்வர் மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்கிரஸ் ஆட்டம் காண துவங்கியுள்ள நிலையில், அக்கட்சியைச் சேர்ந்த 50 எம்.எல்.ஏ.,க்கள், 20 எம்.பி.,க்கள் பா.ஜ.,வில் இணைய உள்ளதாக, பா.ஜ., லோக்சபா எம்.பி., சவுமித்ரா கான் தெரிவித்துள்ளது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேற்கு வங்கத்தில் சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், மொத்தமுள்ள 294 தொகுதிகளில் 208ல் வென்று, ஆட்சி அதிகாரத்தை பா.ஜ., முதன்முறையாக கைப்பற்றியது. தொடர்ந்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வராக பதவியேற்றார்.
ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., வெறும் 80 தொகுதிகளையே கைப்பற்றியது. சொந்த தொகுதியான பவானிபூரிலேயே அவர் தோற்றது, கட்சி நிர்வாகிகளை அதிர்ச்சி அடையச் செய்தது. தேர்தல் தோல்வியால், உள்ளாட்சி அமைப்புகளில் இடம்பெற்றிருந்த திரிணமுல் காங்கிரசைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், சமீபத்தில் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர். இது, அக்கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், மேற்கு வங்கத்தின் பிஷ்ணுபூர் லோக்சபா தொகுதி பா.ஜ., – எம்.பி., சவுமித்ரா கான் நேற்று கூறியதாவது:
திரிணமுல் காங்., – எம்.எல்.ஏ.,க்கள் 50 பேர் மற்றும் எம்.பி.,க்கள் 20 பேர், அக்கட்சி தலைவர் மம்தா பானர்ஜி மீது கடும் அதிருப்தியில் உள்ளனர். பா.ஜ.,வில் சேர அவர்கள் தயாராக இருக்கின்றனர்.
மேலும், திரிணமுல் காங்., முக்கிய நிர்வாகிகளும் பா.ஜ.,வில் சேர ஆவலாக உள்ளனர். பா.ஜ., மேலிடம் அனுமதிக்காக அவர்கள் காத்திருக்கின்றனர். கட்சி மேலிடம் அனுமதி அளித்தால், திரிணமுல் காங்., என்ற ஒரு கட்சியே இருக்காது.
மம்தா பானர்ஜியின் உறவினர் அபிஷேக் பானர்ஜி முந்தைய ஆட்சி காலத்தில் நிறைய அட்டூழியங்களை செய்துள்ளார். அவர் சிறைக்கு செல்வதற்கான நாள் நெருங்கி விட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கட்சி தலைமை மீது அதிருப்தியை வெளிப்படுத்திய திரிணமுல் காங்., லோக்சபா எம்.பி., ககோலி கோஷ் தஸ்திதார், கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்தார்.
Source: Dinamalar