தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
– டில்லி சிறப்பு நிருபர் -:
‘ஜாமின் வழங்குவது மற்றும் சிறைத்தண்டனையில் இருந்து விலக்களிப்பது போன்றவை, ‘உபா’ எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைதானவர்களுக்கும் பொருந்தும்’ என, உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதிகளுக்கு நிதியளித்தல் தொடர்பாக ஜம்மு – காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தை சேர்ந்த சையத் இப்திகார் அந்த்ராபி என்பவரை என்.ஐ.ஏ., எனப்படும் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் கைது செய்தனர்.
‘உபா’ எனப்படும், சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர், 2020 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இவரது ஜாமின் மனு, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
கடந்த 2021ல் நடந்த கே.ஏ.நஜீப் வழக்கில், விசாரணையில் ஏற்படும் நீண்ட கால தாமதம் மற்றும் விசாரணைக்கு முந்தைய நீண்ட கால சிறைவாசம் ஆகியவற்றை ஜாமின் வழங்குவதற்கான காரணங்களாக மூன்று நீதிபதிகள் அடங் கிய உச்ச நீதிமன்ற அமர்வு அங்கீகரித்துள்ளது.
கடந்த 2020ல் டில்லியில் நடந்த கலவரம் காரணமாக, சட்டவிரோத நடவடிக்கை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள உமர் காலித் மற்றும் ஷர்ஜீல் இமாம் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமின் மறுக்கப்பட்டது.
உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வின் அந்த உத்தரவு ஏற்றுக்கொள்ள முடியாதது.
இந்திய அளவில், உபா சட்ட வழக்குகளில் இரண்டு முதல் ஆறு சதவீதம் வரை மட்டுமே தண்டனைகள் வழங்கப்படுகின்றன. ஜம்மு – காஷ்மீரில் இந்த தண்டனை விகிதம் ஒரு சதவீதத்திற்கும் கீழே உள்ளது.
அதாவது 99 சதவீத வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் விடுவிக்கப்படும் நிலையில்தான் உள்ளது. ‘பிணையே விதி, சிறையே விதிவிலக்கு’ என் பது அரசியலமைப்பின் 21 மற்றும் 22வது பிரிவுகளில் இருந்து உருவான கோட்பாடு.
உபா சட்டத்தின் கீழும், ஜாமின் என்பது விதியாகவும், சிறை என்பது விதிவிலக்காவும் உள்ளது என்று கூறுவதில் எங்களுக்கு எவ்வித சந்தேகமும் இல்லை.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட சையத் இப்திகார் அந்த்ராபிக்கு நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கப்படுகிறது. அவர் தன் பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதுடன், 15 நாட்களுக்கு ஒரு முறை உள்ளூர் போலீஸ் ஸ்டேஷனில் ஆஜராக வேண்டும்.
இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.
Source: Dinamalar