மே.வங்க பால்டா தொகுதியில் நாளை மறுதேர்தல்; போட்டியிலிருந்து விலகினார் திரிணமுல் வேட்பாளர்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
கொல்கட்டா: மேற்கு வங்கத்தின் பால்டா சட்டசபை தொகுதியில், நாளை மறுநாள் மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சியான திரிணமுல் காங்., வேட்பாளர் ஜஹாங்கீர் கான், வேட்புமனுவை திரும்ப பெறுவதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்துள்ளார்.
மேற்கு வங்கத்தில் மொத்தமுள்ள, 294 சட்டசபை தொகுதிகளுக்கு சமீபத்தில் இரு கட்டங்களாக தேர்தல் நடந்தது. முறைகேடு நடந்ததாக எழுந்த புகாரின்படி, தெற்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தின் பால்டா தொகுதியில் மட்டும், மே 21ல் மறு தேர்தல் நடக்கும் என்றும், 24ல் ஓட்டு எண்ணிக்கை நடக்கும் என்றும், தேர்தல் கமிஷன் அறிவித்தது.
பால்டா தொகுதியை தவிர்த்து, 293 தொகுதிகளில் கடந்த, 4ல் ஓட்டு எண்ணிக்கை நடந்தது. இதில், 207 தொகுதிகளில் பா.ஜ., வென்றதை அடுத்து, அக்கட்சியின் மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி முதல்வரானார். ஆளுங்கட்சியாக இருந்த மம்தா பானர்ஜியின் திரிணமுல் காங்., வெறும், 80 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.மறு தேர்தல் அறிவிக்கப்பட்ட பால்டா தொகுதியில், பா.ஜ., சார்பில், தேபாங்ஷு பாண்டா போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து, திரிணமுல் காங்., வேட்பாளர் ஜஹாங்கீர் கான் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அவரும் வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
நாளை மறுநாள் மறு தேர்தல் நடக்கவுள்ள நிலையில், திரிணமுல் காங்., வேட்பாளர் ஜஹாங்கீர் கான், வேட்புமனுவை திரும்ப பெறுவதாகவும், போட்டியில் இருந்து விலகுவதாகவும் அறிவித்தார்.
ஜஹாங்கீர் கான் கூறுகையில், ”பால்டா தொகுதியில் அமைதி, பாதுகாப்பு, வளர்ச்சியை ஊக்குவிப்பதே என் நோக்கம். இத்தொகுதி மக்களுக்காக முதல்வர் சுவேந்து அதிகாரி சிறப்பு திட்டத்தை அறிவித்துள்ளார். இந்த ஒரே காரணத்திற்காகவே என் வேட்புமனுவை திரும்பப் பெறுகிறேன். பால்டாவின் வளர்ச்சி, அமைதிக்காகவே போட்டியில் இருந்து விலகுகிறேன்,” என்றார். இதனால் அதிர்ச்சி அடைந்த திரிணமுல் காங்., ‘ஜஹாங்கீர் கானின் முடிவுக்கும், கட்சிக்கும் எந்த தொடர்பும் இல்லை’ என, தெரிவித்துள்ளது.
இது குறித்து, முதல்வர் சுவேந்து அதிகாரி கூறுகையில், ”ஓட்டுச்சாவடிகளில் உட்கார ஏஜன்டுகள் கிடைக்காததால், ஜஹாங்கீர் கான் பயந்து ஓடிவிட்டார்,” என, கிண்டலாக குறிப்பிட்டார்.
மம்தா பானர்ஜியின் உறவினரும், திரிணமுல் காங்., பொதுச்செயலருமான அபிஷேக் பானர்ஜி, டைமண்டு ஹார்பர் லோக்சபா தொகுதி எம்.பி.,யாக உள்ளார். இதன் கீழ் பால்டா வருவதால், மறு தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
ஆனால், தேர்தல் முடிவுகளுக்கு பின், மம்தா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜி உள்ளிட்ட மூத்த தலைவர்களோ, வேட்பாளராக அறிவிக்கப்பட்ட ஜஹாங்கீர் கானோ இந்த தொகுதியில் எந்தவொரு பொதுக்கூட்டத்தையோ அல்லது பிரசாரத்தையோ மேற்கொள்ளவில்லை.
Source: Dinamalar