NPUI.

NPUI.

National Press Union of India (NPUI) is a National Platform for Journalists and Media Professionals Operated By NPUI Media Network LLP.

‘குவாட்’ கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தில் முக்கிய முடிவு; இந்தோ – பசிபிக் பகுதியில் சீனாவுக்கு பதிலடி தர ஆயத்தம்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

டீ கடை பெஞ்ச்

தினம் தினம்

இணைப்பு மலர்

உள்ளூர் செய்திகள்

புதுடில்லி: இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் ராணுவ தலையீட்டுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், அப்பகுதி முழுதும் கடல்சார் கண்காணிப்பை மேம்படுத்தவும், முக்கிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி துறையில் ஒத்துழைப்பை விரிவுப்படுத்தவும், ‘குவாட்’ கூட்டமைப்பு ஒப்புக் கொண்டுள்ளது.

இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் அங்கம் வகிக்கும், ‘குவாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் டில்லியில் நடந்தது. நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, ஆஸ்திரேலிய வெளியுறவு அமைச்சர் பென்னி வாங் மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர் தோஷிமிட்சு மோட்டேகி ஆகியோர் பங்கேற்றனர்.

இதைத் தொடர்ந்து, ‘குவாட்’ கூட்டமைப்பின் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர். அதன் விபரம்: உலக நாடுகள் சொந்த பாதையில் பயணிக்க வகை செய்யும் திறனை வலுப்படுத்தவும், மீள்திறனை வளர்த்து கொள்ளவும், சுதந்திரமான மற்றும் வெளிப்படையான பகுதியாக இந்தோ – பசிபிக் பிராந்தியம் இருக்க வேண்டும். அதற்கு குவாட் கூட்டமைப்பு நாடுகள் ஆதரவு தெரிவிக்கின்றன. இதற்காக உறுதியான நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கும் குவாட் நாடுகள் முடிவு செய்துள்ளன.

ஹார்முஸ் ஜலசந்தி வழியாக நடக்கும் சர்வதேச வர்த்தகத்திற்கு எந்த இடையூறும் இருக்கக் கூடாது என கருதுகிறோம். இந்த பகுதியில் வர்த்தக ரீதியிலான சரக்கு கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரானின் முடிவுக்கு குவாட் கூட்டமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவிக்கிறது.அதே போல் கிழக்கு மற்றும் தென் சீன கடல் பகுதியில், ஏற்பட்டிருக்கும் இடையூறுகளும் கவலையை ஏற்படுத்துகின்றன.

தென் சீன கடல் பகுதியில் உலக நாடுகளை அச்சுறுத்தும் வகையிலோ, அந்த பிராந்தியத்தின் அமைதியை கெடுக்கும் வகையிலோ ராணுவ ரீதியாக எடுக்கும் நடவடிக்கைகளை ஒருபோதும் பொறுத்துக் கொள்ள முடியாது. அதற்கு குவாட் கூட்டமைப்பு நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கும். கடல்சார் வள மேம்பாடுகளில் தலையிடுவது, கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்தின் சுதந்திரத்தை முடக்குவது, ராணுவ விமானங்கள் மற்றும் கடலோரக் காவல் படை மூலம் அச்சுறுத்துவது போன்ற ஆபத்தான நகர்வுகளும் கண்டனத்துக்குரியது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறியதாவது: இந்தோ – பசிபிக் பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள முக்கியமான சவால்களை சமாளிக்கும் வகையில் குவாட் கூட்டமைப்பில் சில முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. குறிப்பாக, இந்தோ – பசிபிக் எரிசக்தி பாதுகாப்பு முன்னெடுப்புக்காக முக்கிய கனிமங்கள் கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தோ – பசிபிக் பிராந்தியத்தின் வெவ்வேறு முனைகளில் அமைந்துள்ள நான்கு கடல்சார் ஜனநாயக நாடுகளாக இருப்பதால், எங்கள் கண்ணோட்டங்களை பரிமாறிக் கொண்டது மதிப்பு மிக்கதாக இருந்தது.

பாதுகாப்பான, தடையற்ற கடல்சார் வர்த்தகம் குறித்து நாங்கள் விவாதித்தோம். எதிர்காலத்தில், பொருளாதார நடவடிக்கையாக இருந்தாலும், எரிசக்தி வர்த்தகமாக இருந்தாலும், கடல்சார் வர்த்தகமாக இருந்தாலும், இந்தோ – பசிபிக் பிராந்தியம் உலகத்திற்கு அதிக முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறும். அதற்கேற்ப நாம் தயாராக இருக்க வேண்டும்.

நாடுகளுக்கு இடையே பொதுவான அச்சுறுத்தலாக இருக்கும் பயங்கரவாதம் குறித்தும் விவாதித்தோம். பயங்கரவாதத்தை வேரறுப்பதில் பூஜ்ஜிய சகிப்புதன்மையை கடைப்பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளோம். பயங்கரவாத தாக்குதலில் இருந்து தற்காத்து கொள்ள ஒவ்வொரு நாட்டுக்கும் முழு உரிமை இருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.

டில்லியில் நடந்த குவாட் கூட்டமைப்பு நாடுகளின் கூட்டத்தின்போது இந்தியா – அமெரிக்கா இடையே வரலாற்று சிறப்புமிக்க முக்கிய கனிமங்கள் வினியோக தொடர்பு குறித்த ஒப்பந்தம் கையெழுத்தானது. ஸ்மார்ட் போன்கள், மின்சார வாகனங்கள், பாதுகாப்பு தளவாடங்கள் மற்றும் செமிகண்டக்டர் தயாரிப்புக்கு அவசியமான இந்த முக்கிய கனிமங்களின் ஏற்றுமதியில் சீனாவின் ஏகபோக கட்டுப்பாடுகளை உடைக்கும் வகையில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது.

இது குறித்து நம் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூறுகையில், ”உலக நாடுகள் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் வேளையில், இந்த ஒப்பந்தம் மிகவும் சரியான நேரத்தில் எட்டப்பட்ட மிக முக்கியமான நகர்வாகும். இது நம் வினியோக தொடரை மேலும் வலுப்படுத்தும்,” என்றார்.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ கூறுகையில், ”வாஷிங்டனில் கடந்த பிப்., 4ம் தேதி நடந்த முக்கிய கனிமங்கள் கூட்டமைப்பில் இந்தியா இணைந்ததன் மூலம், முக்கிய கனிமங்கள் வினியோக தொடர்பு விவகாரத்தில் அஸ்திவாரம் போடப்பட்டது. தவிர, செயற்கை நுண்ணறிவு மற்றும் அதிநவீன தொழில்நுட்பங்களுக்கான வினியோக தொடரை பாதுகாப்பதற்காக அமெரிக்காவால் கடந்த ஆண்டு தொடங்கப்பட்ட பாக்ஸ் சிலிக்கா சர்வதேச கூட்டணியில் இந்தியா இணைந்ததும், பணிகள் வேகம் எடுக்க ஆரம்பித்துவிட்டன,” என்றார்.

இந்த விநியோகச் சங்கிலியைப் பாதுகாப்பதற்காக, தனியார் துறையுடன் இணைந்து 2.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகள், கடன்கள் மற்றும் நிதியுதவிகளை அமெரிக்கா திரட்டி வருகிறது. இந்த முதலீடுகள் மூலம் முக்கிய கனிமங்கள் சந்தையில் சீனா போன்ற ஒரேயொரு நாட்டை மட்டும் சார்ந்திருக்கும் கட்டாயமும், அதன் மூலம் ஏற்படும் அச்சுறுத்தல்களும் உலக நாடுகளுக்கு குறையும் என அமெரிக்கா கருதுகிறது.

Source: Dinamalar

National Press Union of India (NPUI) is an independent National Platform for Journalists and Media Professionals.

© 2026 All Rights Reserved NPUI Media Network LLP