தமிழகத்திற்கு காவிரியில் இருந்து 9.91 டிஎம்சி நீர் திறந்துவிட வேண்டும்; கர்நாடகாவுக்கு காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவு
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: காவிரியில் இருந்து 9.91 டிஎம்சி நீரை தமிழகத்திற்கு திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
காவிரி நதிநீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் நேரடியாகவும், காணொலி வாயிலாகவும் புதுடில்லியில் இன்று (மே 26) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தமிழக அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
அப்போது, தமிழகத்திற்கு 2026ம் ஆண்டு ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டிம்சி தண்ணீரை திறந்துவிட தண்ணீரை, உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி பிலிகுண்டுலுவில் இருந்து திறந்துவிடுமாறு வலியுறுத்தினர்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் 51வது கூட்டம் இன்று புதுடில்லியில் எஸ்.கே.ஹல்தார் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் நீர்வளத்துறை அரசு முதன்மைச் செயலாளர், சத்யபிரத சாகு தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி வாயிலாக கலந்து கொண்டார்.
தற்பொழுது அணையின் நீர் இருப்பு 40.742 டி.எம்.சி ஆக உள்ளது அணையிலிருந்து வினாடிக்கு 1003 கன அடி நீர் குடிநீர், தொழிற்சாலை பயன்பாட்டிற்கும் மற்றும் சுற்றுச்சூழல் நீர் ஓட்டத்திற்காகவும் திறந்து விடப்படுகிறது என்றும் தெரிவித்தார்.
நடப்பு நீர்பாசன ஆண்டில் (2025-2026) 2025, ஜூன் 1 முதல் 2026, மே 24ம் தேதி வரை பிலிகுண்டுலுவில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நீரின் அளவான 176.685 டிஎம்சிக்கு பதிலாக மிகை நீர் உள்பட கிடைக்கப் பெற்ற நீரின் அளவு 329.166 டிஎம்சி ஆகும். இதனை சுட்டி காட்டி, கர்நாடக உ றுப்பினர், கர்நாடகா அளித்துள்ள மிகை நீரையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று தெரிவித்ததை, ஏற்றுக்கொள்ள இயலாது என்றும் கர்நாடகா அதன் நீர்த் தேக்கத்தில் தேக்க முடியாமல் வெளியேற்றிய நீரினை அது சொந்தம் கொண்டாட முடியாது என்றும் தமிழக உறுப்பினர் வலியுறுத்தினார்.
இந்திய வானிலை ஆராய்ச்சி மையத்தின் அறிக்கையின்படி 2026 ஆம் ஆண்டு மே 26 அன்று தென்மேற்கு பருவமழை கேரளாவில் துவங்கும் என்று கணக்கிடப்பட்டுள்ளது. இப்பருவமழை இயல்பான அளவாக இருக்கும் என்ற கருத்தின்படியும், கர்நாடக அணைகளின் நீர் வரத்தினை கருத்தில் கொண்டும் தமிழகத்திற்கு 2026 ஜூன் மாதம் வழங்கப்பட வேண்டிய 9.91 டிஎம்சி நீரினை உச்சநீதிமன்ற ஆணையின் படி கர்நாடகா பில்லிகுண்டுலுவில் உறுதிசெய்யுமாறு ஆணையத்தை வலியுறுத்தினார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.
இந் நிலையில் காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஜுன் மாதம் திறக்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை திறந்துவிடுமாறு கர்நாடகாவுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
Source: Dinamalar