பெருந்துறையில் பலம் இழக்கும் திமுக, அதிமுக; இடைத்தேர்தலில் தவெகவுக்கு வாய்ப்பு அதிகம்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
பெருந்துறை தொகுதி அ.தி.மு.க., கோட்டை என வர்ணிக்கப்பட்டாலும், தி.மு.க., – அ.தி.மு.க., தொடர்ந்து பலம் இழப்பதால், இம்முறை த.வெ.க.,வுக்கு சாதகமாகும் நிலை ஏற்படுகிறது.
பெருந்துறை தொகுதியில், 1957 முதல், 2026 வரை நடந்த, 16 பொதுத்தேர்தல்களில், அ.தி.மு.க., – 10, இந்திய கம்யூனிஸ்ட் – 4, காங்கிரஸ் -1, சம்யுக்தா சோசலிஸ்ட் பார்ட்டி-1 முறை என வென்றுள்ளது. நடந்து முடிந்த தேர்தலில், 9,693 ஓட்டு வித்தியாசத்தில் அ.தி.மு.க.,வின் ஜெயகுமார் வென்றார். அவர் பதவியை ராஜினாமா செய்து விட்டதால், இடைத்தேர்தலை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இது குறித்து அ.தி.மு.க., தி.மு.க.,வினர் கூறியதாவது: பெருந்துறை எப்போதும் அ.தி.மு.க., கோட்டை. கடைசியாக அ.தி.மு.க.,வில் தோப்பு வெங்கடாசலம், 2011, 2016 தேர்தல்களில் வென்றார். 2021ல் அ.தி.மு.க.,வில் ஜெயகுமார், 85,125 ஓட்டுகள் பெற்று வென்றார். அதேநேரம் தோப்பு வெங்கடாசலம் அ.தி.மு.க.,வில் இருந்து விலகி, தி.மு.க.,வில் இணைந்ததால், அவரது ஆதரவாளர்கள், அ.தி.மு.க., அதிருப்தி கோஷ்டியும் தி.மு.க.,வுக்கு மாறியது. இருந்தும் அ.தி.மு.க., கோட்டை என்பதுடன், ஜெயகுமாரின் அணுகுமுறையால், தி.மு.க.,வுக்கு போட்டியாக கவனிப்பை வாரி வழங்கி வென்றார்.
தோப்பு வெங்கடாசலம் தோல்விக்கு, தி.மு.க., மற்றும் கொ.ம.தே.க.,வினர் சரியான ஒத்துழைப்பு வழங்காததும், அடக்கி வாசித்ததும், இன்னும் சிலர் ஜெயகுமாரை ஆதரித்ததும் காரணமானது. இச்சூழலில் தனது எம்.எல்.ஏ., பதவியை ஜெயகுமார் ராஜினாமா செய்து, த.வெ.க.,வில் களம் இறங்குகிறார். தற்போதைய தேர்தலில், 2,14,451 ஓட்டில், 1,99,874 ஓட்டுகள் பதிவானது. அதில், அ.தி.மு.க., ஜெயகுமார் – 70,302, தி.மு.க., தோப்பு வெங்கடாசலம் – 60,609, த.வெ.க., வி.பி.அருணாசலம் – 59,482 ஓட்டுகள் பெற்றனர்.
ஜெயகுமார், 9,693 ஓட்டில் வென்றுள்ளார். தற்போது அ.தி.மு.க.,வில் யார் நிறுத்தப்பட்டாலும், ஜெயகுமார் அந்த ஓட்டை கணிசமாக பிரிப்பார். தனது சொந்த செல்வாக்கில் உள்ள ஓட்டை ஒருங்கிணைப்பார். தி.மு.க.,வில் இருந்து இரு கம்யூனிஸ்ட்கள், ஐ.யூ.எம்.எல்., – வி.சி.க., போன்றோர் த.வெ.க., பக்கம் உள்ளதால், அந்த ஓட்டுகள் த.வெ.க.,வுக்கு கிடைக்கும். ஏற்கனவே த.வெ.க.,வில் நின்ற அருணாசலம், 59,482 ஓட்டை பெற்றுள்ளார்.
த.வெ.க.,வுக்கு கடந்த முறை கிடைத்த ஓட்டை அப்படியே பெற்று, தி.மு.க.,வில் இருந்து பிரிந்த கூட்டணிகளின் ஓட்டு, ஜெயகுமாரின் சொந்த செல்வாக்கு ஓட்டு, அ.தி.மு.க., அதிருப்தி ஓட்டுக்கள் என வரும்போது த.வெ.க.,வுக்கு வாய்ப்பு அதிகரிக்கும். தொகுதியில் பா.ஜ.,வை ஆதரிக்கும் வடமாநில தொழிலாளர்கள் கூட, அ.தி.மு.க.,வுக்கு ஓட்டுப்போட மாட்டார்கள். எனவே தி.மு.க., – அ.தி.மு.க., பலமிழந்து ஓட்டு பிரிவதும், உடைவதும், த.வெ.க.,வுக்கு சாதகமாக இருக்கும். இவ்வாறு கூறினர்.
Source: Dinamalar