ரேடார் கண்களில் சிக்காத ‘ஸ்டெல்த்’ போர் விமானம் தயாரிப்பு; 3 தனியார் நிறுவனங்களுக்கு டெண்டர்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: நாட்டின் மிகப் பெரிய, ‘ஸ்டெல்த்’ ரக போர் விமானத்தை வடிவமைக்கும் திட்டத்தை ராணுவ அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக முன்னெடுத்தது. தனியார் பங்களிப்புடன் ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை தயாரிப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி உள்ளன.
நம் விமானப் படையிடம், ‘சுகோய், தேஜஸ்’ போன்ற நான்காம் தலைமுறை விமானங்களே இருக்கின்றன. அண்டை நாடான சீனாவுக்கு போட்டியாக ரேடார்களில் எளிதில் சிக்காத, ‘ஸ்டெல்த்’ தொழில்நுட்பம், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு ஒருங்கிணைப்பு, நவீன சென்சார்கள் மற்றும் நீண்ட துார இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அதிநவீன போர் விமானங்களை தயாரிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
இதையொட்டி, ஏ.எம்.சி.ஏ., எனப்படும், ‘அட்வான்ஸ்டு மல்டிரோல் காம்பேட் ஏர்கிராப்ட்’ திட்டம் எனப்படும் அதிநவீன பல்முனை தாக்குதல் போர் விமான திட்டத்தை ராணுவ அமைச்சகம் முன்னெடுத்துள்ளது. இதற்காக தனியார் நிறுவனங்களான, ‘டாட்டா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ், எல் அண்டு டி’ மற்றும், ‘பாரத் போர்ஜ்’ ஆகிய நிறுவனங்களிடம் டெண்டர் கோரப்பட்டுள்ளது.
இதில், ‘எல் அண்டு டி’ நிறுவனம், ‘பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட்’ நிறுவனத்துடன் கைகோர்த்து ஐந்தாம் தலைமுறை போர் விமானங்களை உருவாக்க முன் வந்துள்ளது.’பாரத் போர்ஜ்’, நிறுவனம், பி.இ.எம்.எல்., எனப்படும், ‘பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட்’ நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது.
இதில் சுவாரஸ்யமாக, உள்நாட்டு முக்கிய விமான தயாரிப்பு நிறுவனமான ஹெச். ஏ.எல்., எனப்படும் ‘ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட்’ நிறுவனம் இந்த டெண்டரில் இருந்து விலக்கி வைக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த மூன்று நிறுவனங்களும் டெண்டர்களை சமர்பித்த பின், திட்டத்துக்கான தேர்வு நடைமுறை தொடங்கும். இதனால், எந்த நிறுவனம் ‘ஸ்டெல்த்’ ரக விமானங்களை தயாரிக்கப் போகிறது என்ற இறுதி முடிவு எடுக்க நான்கு முதல் ஐந்து மாதங்கள் ஆகும் என வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Source: Dinamalar