தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், வரும் ஜூலை 1 முதல் மும்மொழி கற்பது கட்டாயம் என்ற சி.பி.எஸ்.இ.,யின் கொள்கையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி., எனப்படும், தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.
நாடு முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியத்தின் பள்ளிகளில், 9ம் வகுப்பு பயிலும் மாணவர்கள், வரும் ஜூலை 1 முதல் மும்மொழி கற்பது கட்டாயம் என, சமீபத்தில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த பாடத்திட்டத்தின்படி, இரு மொழிகள் இந்திய மொழிகளாக இருக்க வேண்டும் என்றும், வெளிநாட்டு மொழியை கற்க விரும்புவோர் அதை மூன்றாவது மொழியாக கற்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. மூன்றாவது மொழிக்கு 10ம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்தப்படாது எனவும் அறிவிக்கப்பட்டது.
சி.பி.எஸ்.இ.,யின் இந்த மும்மொழி கொள்கையை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் விபுல் எம்.பஞ்சோலி அடங்கிய அமர்வில் நேற்று இந்த மனு விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுவை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்த நீதிபதிகள், இது குறித்து பதில் மனு தாக்கல் செய்யக் கோரி மத்திய அரசு, சி.பி.எஸ்.இ., மற்றும் என்.சி.இ.ஆர்.டி.,க்கு உத்தரவிட்டனர்.
மேலும், இந்த புதிய கொள்கையைச் செயல்படுத்துவதற்கான சி.பி.எஸ்.இ.,-யின் உள்கட்டமைப்பு மற்றும் தயார் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஐஸ்வர்யா பாத்திக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை மாதத்தின் இரண்டாவது வாரத்திற்கு ஒத்திவைத்தனர்.
Source: Dinamalar