தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
தர்மசாலா: கேப்டன் ரஜத் படிதார் 33 பந்தில் 93 ரன் விளாச, பெங்களூரு அணி தொடர்ந்து இரண்டாவது முறையாக பைனலுக்கு முன்னேறியது. தகுதிச்சுற்று-1 போட்டியில் ரன் வித்தியாசத்தில் சுலபமாக வென்றது. குஜராத் அணி ஏமாற்றம் அளித்தது.
வருடம் தோறும் கிரிக்கெட் லீக் தொடர் நடக்கிறது. நேற்று தர்மசாலா மைதானத்தில் (இமாச்சல்) நடந்த ‘பிளே-ஆப்’, தகுதிச்சுற்று-1ல், புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பெற்ற பெங்களூரு, குஜராத் அணிகள் மோதின. குஜராத் அணியில் அர்ஷத் கானிற்கு பதிலாக இடது கை ‘வேகப்புயல்’ குல்வந்த் கெஜ்ரோலியா சேர்க்கப்பட்டார். ‘டாஸ்’ வென்ற குஜராத் கேப்டன் சுப்மன் கில், ‘பவுலிங்’ தேர்வு செய்தார்.
பெங்களூரு அணிக்கு வெங்கடேஷ் ஐயர் அதிரடி துவக்கம் தந்தார். சிராஜ் வீசிய முதல் ஓவரில் 3 பவுண்டரி அடித்தார். வெங்கடேஷ், 19 ரன்னில் (7 பந்து) அவுட்டானார். பின் அனுபவ கோலி, தேவ்தத் படிக்கல் அசத்தினர். ‘பவர் பிளே'(1-6 ஓவர்) முடிவில், பெங்களூரு 76/1 ரன் குவித்தது. ஹோல்டர் ஓவரில், கோலி (43 ரன், 25 பந்து), படிக்கல் (30) அவுட்டாகினர்.
பின் கேப்டன் ரஜத் படிதார், குர்ணால் பாண்ட்யா சேர்ந்து மிரட்டினர். 14, 20 ரன்னில் கண்டம் தப்பிய படிதார் வெளுத்து வாங்கினார். குல்வந்த் கெஜ்ரோலியா ஓவரில் (15வது) 5 ‘நோ-பால்’, குர்னால் ஒரு பவுண்டரி, படிதார் 4,6,4 என விளாச, மொத்தம் 28 ரன் எடுக்கப்பட்டன. ரபாடா ‘வேகத்தில்’ குர்ணால் (43 ரன், 28 பந்து) வெளியேறினார். படிதார், 21 பந்தில் அரைசதம் கடந்தார். டிம் டேவிட் (4) நிலைக்கவில்லை. சிராஜ் ஓவரில் (19வது) படிதார் (6,4), ஜிதேஷ் சர்மா (4,6) அடித்து நொறுக்க, 21 ரன் கிடைத்தன. கடைசி 6 ஓவரில் 114 ரன் எடுக்கப்பட்டன. பெங்களூரு அணி 20 ஓவரில் 254/5 ரன் குவித்தது. ரஜத் படிதார் (93 ரன், 33 பந்து, 5×4, 9×6, ஸ்டிரைக் ரேட் 281.81), ஜிதேஷ் சர்மா (15) அவுட்டாகாமல் இருந்தனர்.
கடின இலக்கைத் துரத்திய குஜராத் அணியின் விக்கெட்டுகள் மடமடவென சரிந்தன. டபி பந்தில் (2.3 ஓவர்) பவுண்டரி அடிக்க முயன்றார் சாய் சுதர்சன் (14). அப்போது கை நழுவிய பேட், ‘ஸ்டம்ப்சை’ தகர்க்க, ‘ஹிட் விக்கெட்’ முறையில் வெளியேறினார். புவனேஷ்வர் குமார் பந்தில் கேப்டன் சுப்மன் கில் (2) போல்டானார். பட்லரும் (29) விரைவில் ‘பெவிலியன்’ திரும்ப, நம்பிக்கை தகர்ந்தது. ரசிக் சலாம் ஓவரில் நிஷாந்த் (5), ஹோல்டர் (0) வெளியேறினர். வாஷிங்டன் சுந்தர் (8), ரஷித் கான் (8) ஏமாற்றினர். குஜராத் அணி 19.3 ஓவரில் 162 ரன்னுக்கு ஆல் அவுட்டாகி, 92 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.
Source: Dinamalar