அறநிலைய துறை சட்டத்தை எதிர்த்த வழக்கில் நேரடி விசாரணை!: முந்தைய உத்தரவை திரும்ப பெற்றது சுப்ரீம் கோர்ட்
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
– டில்லி சிறப்பு நிருபர் -:
தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மாநிலங்களில், அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கை, தகுதி அடிப்படையில் நேரடியாக விசாரிக்க உச்ச நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. உயர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறும்படி பிறப்பித்த முந்தைய உத்தரவை திரும்பப் பெற்றது.
ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டங்களுக்கு எதிராக, தமிழகத்தின் கோவையைச் சேர்ந்த ஆன்மிக துறவி சுவாமி தயானந்த சரஸ்வதி உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கை, உச்ச நீதிமன்ற நீதிபதி பி.வி.நாகரத்னா தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.
இதை விசாரித்த அமர்வு, ‘இந்த சட்டங்களை எதிர்ப்பவர்கள், அந்தந்த மாநில உயர் நீதிமன்றங்களை அணுகி நிவாரணம் பெறலாம்’ என, 2025 ஏப்., 1-ல் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த மனுதாரர்களின் வழக்கறிஞர்கள், ‘தமிழகம், புதுச்சேரி, ஆந்திரா ஆகிய மூன்று மாநிலங்களிலும் உள்ள அறநிலையத்துறை சட்டங்கள் ஏறக்குறைய ஒரே மாதிரியான விவகாரங்களையும், விதிகளையும் தான் கையாளுகின்றன.
‘எனவே, வெவ்வேறு உயர் நீதிமன்றங்கள் மாறுபட்ட தீர்ப்புகளை வழங்குவதை தவிர்க்க, உச்சநீதிமன்றமே இதை முழுமையாக விசாரித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்றனர். இதற்கு யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
இந்நிலையில், இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்குவந்தது.
அப்போது, நீதிபதி பி.வி.நாகரத்னா அமர்வு பிறப்பித்த உத்தரவு:
மனுதாரர்களின் கோரிக்கை ஒரே மாதிரியாக இருப்பதாலும், சட்டங்களின் தன்மை ஒன்றாக இருப்பதாலும், 2025 ஏப்., 1-ல் பிறப்பித்த உத்தரவை நாங்கள் திரும்ப பெறுகிறோம்.
அறநிலையத்துறை சட்டங்களை எதிர்த்த முதன்மை ரிட் மனுக்கள் அனைத்தும் மீண்டும் பட்டியலிடப்பட்டு, உச்ச நீதிமன்றத்தாலேயே ‘மெரிட்’ அடிப்படையில் நேரடியாக விசாரிக்கப்படும்.
இவ்வாறு அமர்வு உத்தரவிட்டது.
நேற்றைய விசாரணையின் போது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சாய் தீபக், ”தமிழக ஹிந்து சமய அறநிலையத்துறை சட்டத்தில் உள்ள பல குறிப்பிட்ட பிரிவுகளை எதிர்த்து தனித்தனியாக புதிய மனுக்களை தாக்கல் செய்துள்ளோம்.
”அவற்றையும் இந்த முதன்மை வழக்கோடு இணைத்து விசாரிக்க வேண்டும்,” என்றார்.
இதை ஏற்ற அமர்வு, அறநிலையத்துறை சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட அனைத்து மனுக்கள் மீதும் விரிவான விசாரணை நடத்தப்படும் என தெரிவித்து, வழக்கை ஜூலை 24க்கு ஒத்திவைத்தது.
Source: Dinamalar