ஊடக சுதந்திரம் பற்றி கேள்வி எழுப்பிய நார்வே பெண் பத்திரிகையாளருக்கு வெளியுறவு அமைச்சகம் பதிலடி
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் நார்வே பயணத்தின் போது ஊடக சுதந்திரம் குறித்து அந்நாட்டு பெண் பத்திரிகையாளர் எழுப்பிய கேள்விக்கு, நம் வெளியுறவு அமைச்சகம் உரிய விளக்கம் அளித்துள்ளது.
ஐரோப்பிய நாடான நெதர்லாந்தைத் தொடர்ந்து நார்வேக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி, அந்நாட்டு பிரதமர் ஜோனாஸ் கர் ஸ்டோரை, தலைநகர் ஒஸ்லோவில் சந்தித்து பேசினார். அதன்பின் இருவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது, அந்நாட்டைச் சேர்ந்த பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங், பிரதமர் மோடியிடம் சில கேள்விகளை எழுப்பினார்.
அப்போது அவர், “உலகிலேயே மிக சுதந்திரமான பத்திரிகையாளர்களைக் கொண்ட நார்வேயில், இந்திய பிரதமர் ஏன் செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிப்பதில்லை? இந்தியாவில் சிறுபான்மையினர் உரிமைகள் மற்றும் ஊடக சுதந்திரம் குறித்த கவலைகளுக்கு என்ன பதில்? இந்திய ஊடகங்களின் கடுமையான கேள்விகளை பிரதமர் மோடி எப்போது எதிர்கொள்ளத் தொடங்குவார்?” என, கேட்டார்.
ஆனால், அவரது கேள்விகளுக்கு பிரதமர் மோடி பதிலளிக்காமல் சென்றார். இதை, ஹெஸ் லிங், தன் சமூக ஊடகத்தில் வீடியோவாக பதிவிட்டார். அதில் அவர், ‘உலக பத்திரிகை சுதந்திர குறியீட்டில் நார்வே, முதலிடத்தில் உள்ளது. ஆனால் இந்தியா, 157வது இடத்தில் உள்ளது. பாலஸ்தீனம், கியூபா உள்ளிட்ட நாடுகளைவிட இந்தியா பின்தங்கியுள்ளது’ என, குறிப்பிட்டார்.
இதையடுத்து, அந்நாட்டில் உள்ள இந்திய துாதரகம் மீண்டும் செய்தியாளர் சந்திப்பு நடத்தியது. அதில் பங்கேற்று தன் கேள்விகளை கேட்கும்படி அப்பெண் பத்திரிகையாளர் ஹெல் லிங்கிற்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நடந்த செய்தியாளர் சந்திப்பில் பங்கேற்ற அவர், அங்கும் தன் கேள்விக்கு பதிலளிக்கும்படி கேட்டார்.
இதற்கு நம் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் சிபி ஜார்ஜ் கூறியதாவது:இந்தியாவின் பரப்பளவையும் அதன் சிக்கலான தன்மையையும் புரிந்துகொள்ளாமல், ஊடக சுதந்திரம் குறித்து சில தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் வெளியிடும் அறிக்கைகளின் அடிப்படையில் மட்டும் விமர்சகர்கள் தங்கள் கருத்துக்களை உருவாக்கிக் கொள்கின்றனர். இது, அவர்களின் அறியாமையின் வெளிப்பாடு. அவற்றை வாசித்துவிட்டு பலரும் எங்கள் நாட்டை தவறாகப் புரிந்து கொள்கின்றார்கள்.
டில்லியில் மட்டும் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் பல்வேறு மொழிகளில் 200க்கும் மேற்பட்ட செய்தி தொலைக்காட்சிகள் இயங்கி வருகின்றன. இந்தியாவின் பரப்பளவு மற்றும் எங்கள் மக்களைப் பற்றிய போதிய புரிதல் இல்லை. எங்கள் நாட்டில் பேச்சுரிமை மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகள் அனைத்தும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின்படியும், வலுவான ஜனநாயக கட்டமைப்பின்படியும் முழுமையாக பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த உரிமைகள் மீறப்படும் பட்சத்தில் சட்டரீதியான நிவாரணங்களை வழங்கி வருகிறோம். இந்தியா சுதந்திரம் அடைந்தவுடன் பெண்களுக்கு ஓட்டுரிமையை வழங்கினோம். ஆனால், மற்ற நாடுகளில் பல ஆண்டுகள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மனித உரிமைகளுக்கு மிகச்சிறந்த உதாரணம், ஆட்சி அதிகாரத்தை மாற்றி அமைக்கும் உரிமை தான். அதற்கு, மக்களுக்கு ஓட்டுரிமை வழங்கியுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
Source: Dinamalar