ஆக்ரோஷமாக இருக்கும் வெறிநாய்களை கருணைக்கொலை செய்ய… அனுமதி!:அப்புறப்படுத்துவதை எதிர்த்த மனு மீது உச்ச நீதிமன்றம் உத்தரவு
தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
– டில்லி சிறப்பு நிருபர் -:
‘பள்ளிகள், மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை, காப்பகங்களில் அடைக்க பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது’ என, திட்டவட்டமாக தெரிவித்த உச்ச நீதிமன்றம், ஆக்ரோஷமாக இருக்கும் வெறி பிடித்த நாய்களை கருணைக்கொலை செய்ய அனுமதி வழங்கியது.
தலைநகர் டில்லி உட்பட நாடு முழுதும் தெரு நாய்க்கடி சம்பவங்கள் தொடர்பாக, உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்து வருகிறது. மருத்துவமனைகள், பஸ் நிலையங்கள், பள்ளிகள் போன்ற பொது இடங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்களை உடனடியாக பிடித்து, தடுப்பூசி செலுத்தி காப்பகங்களில் அடைக்க, கடந்த நவ., 25ல் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த விலங்குகள் நல ஆர்வலர்கள், தடுப்பூசி செலுத்திய பின், பிடித்த இடத்திலேயே தெரு நாய்களை விட வலியுறுத்தி மனு தாக்கல் செய்தனர். இந்த மனு, நீதிபதிகள் விக்ரம்நாத், சந்தீப் மேத்தா, என்.வி.அஞ்சாரியா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.
மனுவை தள்ளுபடி செய்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
தெரு நாய்க்கடி சம்பவங்கள் மிகவும் தீவிரமானவை. அவற்றை எளிதில் கடந்துவிட முடியாது. தமிழகம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் நாய்க்கடி சம்பவங்கள் இன்னும் அதிகரித்த வண்ணம் உள்ளன. கடந்த நான்கு மாதங்களில் மட்டும், 2 லட்சம் நாய்க்கடி வழக்குகள் பதிவாகி உள்ளன.
விமான நிலையங்களில் கூட நாய்க்கடி சம்பவங்கள் நடக்கின்றன. இது, அதிகாரிகளின் அலட்சியத்தை காட்டுகிறது. இது போன்ற காரணங்களால், பொது இடங்களில் இருந்து பிடிக்கப்பட்ட நாய்களை காப்பகங்களில் அடைக்க பிறப்பித்த உத்தரவை மாற்ற முடியாது.
தெரு நாய்களை கட்டுப்படுத்த ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைந்தது ஒரு முழுமையான செயல்பாட்டை கொண்ட விலங்கு பிறப்பு கட்டுப்பாடு மையத்தை, அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் நிறுவ வேண்டும்.
இந்த மையங்களில் கருத்தடை மற்றும் அது சார்ந்த இதர சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு தேவையான வசதிகளும், பயிற்சி பெற்ற டாக்டர்களும் இருக்க வேண்டும். ஒவ்வொரு மாவட்டம் மற்றும் மாநிலத்தின் மக்கள் தொகையை பொறுத்து, இந்த மையங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும்.
இந்திய விலங்குகள் நல வாரியத்தின் விதிகளின்படி, இந்த மையங்கள் திறம்பட செயல்படுவதையும், விதிகளை அமல்படுத்துவதையும் மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். மேலும், வெறி நாய்க்கடி தடுப்பு மருந்துகள் போதிய அளவில் கையிருப்பில் இருப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.
வெறி பிடித்த அல்லது ஆக்ரோஷமான தெரு நாய்களை கருணைக்கொலை செய்ய அதிகாரிகளுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மனிதர்களுக்கு ஏற்படும் அச்சுறுத்தல்களை தடுக்கவே இந்த நடவடிக்கைக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதே நேரத்தில், அதிகாரிகள் எடுக்கும் நடவடிக்கைகள் அனைத்தும் சட்டத்தின் வரம்பிற்குள் மட்டுமே இருக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவுகளை அமல்படுத்தும் பொறுப்பில் உள்ள நகராட்சி அதிகாரிகள், மாநில அரசுகள் மற்றும் பிற அமைப்புகளின் அதிகாரிகளுக்கு, உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளை கையாள்வதற்கு, குறிப்பிட்ட கால வரம்பிற்குள் உரிய நடவடிக்கைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதன் மூலம், பள்ளிகள், மருத்துவமனைகள் போன்ற பொது இடங்களில் இருந்து பிடிக்கப்படும் தெருநாய்களை மீண்டும் அதே பகுதிகளுக்குள் விடக்கூடாது என்பதை நீதிமன்றம் மறுபடியும் உறுதிப்படுத்தி உள்ளது.
Source: Dinamalar