தற்போதைய செய்தி
தினமலர் டிவி
டீ கடை பெஞ்ச்
தினம் தினம்
இணைப்பு மலர்
உள்ளூர் செய்திகள்
லக்னோ: உத்தர பிரதேசத்தில், பொதுக்கூட்டம் ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடியை அவதுாறாக பேசியதாக, மாநில காங்., தலைவர் அஜய் ராய் மீது, எப்.ஐ.ஆர்., எனப்படும் முதல் தகவல்அறிக்கை பதியப்பட்டுள்ளது.
உ.பி.,யில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு மகோபா மாவட்டத்தின் சமத் நகர் என்ற பகுதியில், கடந்த 22ல், காங்., சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் பங்கேற்ற மாநில காங்., தலைவர் அஜய் ராய், பிரதமர் மோடியை அவதுாறாக பேசியதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கோட்வாலி போலீஸ் ஸ்டேஷனில் பா.ஜ., தொண்டர் ஒருவர் அளித்த புகாரில், ‘மாநில காங்., தலைவர் அஜய் ராய், பிரதமர் மோடியை இழிவாக பேசி உள்ளார். இதை ஒருபோதும் ஏற்க முடியாது. சமூகத்தில் பதற்றத்தை உருவாக்க அவர் முயற்சிக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரியிருந்தார்.
இதன்படி, அஜய் ராய் மீது பல்வேறு பிரிவுகளில் கோட்வாலி போலீசார் எப்.ஐ.ஆர்., பதிவு செய்தனர்.
அஜய் ராய் கூறுகையில், ”சமூக வலைதளங்களில் பரவி வரும் வீடியோ முற்றிலும் போலியானது. அது, பா.ஜ.,வால், ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட வீடியோ. இது தொடர்பாக நானும் போலீசில் புகார் அளிப்பேன். இதை எல்லாம் கண்டு அஞ்ச மாட்டேன். சட்டப்படி அனைத்தையும் எதிர்கொள்வேன்,” என்றார்.
Source: Dinamalar